விளம்பர வார்த்தைகள்
இன்றைய நவீன யுகத்தில் விளம்பரங்களுக்கு நடுவே கொஞ்சம் செய்திகளும் (நாளிதழ்கள், வார/மாத இதழ்களில் – குறிப்பாக Outlook போன்ற ஆங்கில இதழ்களைப் படிப்பவர்கள் இதனை உணரலாம்.), கொஞ்சம் பொழுதுபோக்கும் (தொலைக்காட்சி, வானொலியில்) கிடைக்கும் என்கிற நிலை உருவாகி விட்டது. விளம்பரங்களின் அதிக எண்ணிக்கையினாலேயே, பலவற்றுக்கு இடையே ஒரு விளம்பரம் தனித்து நின்று வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பது மிகுந்த கடினமான நிகழ்வாக ஆகிவிட்டது எனலாம்.
இந்நிலையில், வாடிக்கையாளரின் மனதைக் கவரும் வகையில் அமைய, அச்சு விளம்பரங்களில் அவை பயன்படுத்தும் வார்த்தைகள் பெரிதும் பங்கு வகிக்கின்றன. நிழற்படங்கள் போன்றவை அண்மைக் காலமாய் அச்சு விளம்பரங்களில் அதிகளவில் இடம்பெற்று வந்தாலும் copy எனப்படும் வாக்கியங்களே இன்னும் அச்சு விளம்பரங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.
எனவே, அச்சு விளம்பரங்களில் இடம்பெறும் வாக்கியங்கள்/வார்த்தைகளில் அமைய வேண்டிய சில தன்மைகள் பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில;
- வாடிக்கையாளருக்கு ஆர்வத்தை ஊட்டும் சங்கதிகள் பற்றிப் பேச வேண்டும். [Interest element]
- உண்மைத் தோற்றம் கொண்டவையாக இருத்தல் வேண்டும். [Truthfulness]
- “நாங்களே Number 1″ போன்ற எரிச்சல் மூட்டக் கூடிய வாசகங்களைத் தவிர்க்க வேண்டும்.
- பயன்கள் குறித்த தெளிவினை ஏற்படுத்தும் வகையில் அமைதல் வேண்டும். [Clarity about benefits]
- பொதுவான கருத்தாக [generalities] இல்லாமல் குறிப்பிட்ட தன்மை [specifics] உடையதாக இருக்க வேண்டும்.
- அழகு, மற்றும் அலங்காரத்தை விடவும் உள்ளடக்கமே பிரதானம் [content is more important]
- வாடிக்கையாளரின் மனதுக்கு நெருக்கமான மொழியில் அமைய வேண்டும். [Relate to the customer]
ஒரு புகழ்பெற்ற ஆங்கில விளம்பர வாசகங்களின் தமிழாக்கம், எனது முயற்சியில்:
- வைரங்கள் இப்புவியில் தோன்றிட ஒரே ஒரு காரணம் தான்.
அழகும், பொலிவும், அரிய தன்மையும் கொண்ட வைரங்கள், இப்புவில் தோன்றியதெல்லாம், அவற்றை விடவும் அழகும், பொலிவும் அரிய தன்மையும் கொண்ட இன்னொன்றை உணர்த்தி நிற்கவே.
- காதல். பரிசுத்தமான, அழகான, உயர்வான காதல்.
ஒரு வைரம் பரிசளிக்கப்படுவதென்பது, மனதை மயக்கும் ஒரு நிகழ்வாகும். அதை அணிபவர்கள் அறிவார்கள், அவர்கள் தூய்மையான காதலுக்குச் சொந்தக்காரர்கள். வைரங்கள், ஒரு மனதிலிருந்து அன்பின் கனலை இன்னொரு மனதிற்குக் கடத்துகின்றன.
இந்த கிறிஸ்துமஸ் நாளன்று நீங்கள் வைரத்தின் அன்புப் பரிசாகப் பெறுவீர்கள் என்று நம்புகிறோம். அதன் அருமையை, அந்தப் பரிசின் பெருமையை என்றும் மறவாமல் போற்றுவீர்கள் என்றும்.
அல்லது, இந்த கிறிஸ்துமஸ் நாளன்று வைரத்தை நீங்கள் பரிசளிப்பவரா? அடடா! நீங்கள் தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்? வானத்தின் நட்சத்திரங்கள் உங்களுக்காகவே மின்னுகின்றன. ஆம், பல்லாயிரம் வைரங்கள் வானிலிருந்து மின்னுகின்றன.
வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான கருத்தை, அவர்களுக்குப் பிடித்தமான மொழியில், உண்மைத் தோற்றம் கொண்ட வார்த்தைகளால், செறிவான உள்ளடக்கம் தொனிக்க அளித்ததே இந்த விளம்பரத்தின் வெற்றி எனலாம்.