பூதக்கண்ணாடி

Magnify

பூதக்கண்ணாடி, சிறிய பொருள்களை பெரிதாக்கிக் காட்டும் உபகரணம். தலைப்பு சிறிய நிகழ்வுகளை பெரிதாக்கும் இயல்புடைய மனிதர்கள் பற்றியது.  சிறிய நிகழ்வுகள் நல்லதோ,  அல்லாததோ, அவற்றை உள்ளபடி நோக்காமல்,  பெரிதுபடுத்திப் பார்ப்பதே வாழ்வின் அறியாமைக்கு வித்திடுகிறது. நல்லதெல்லாம் அந்த நொடி நல்லது. பின்னால் அவை கெடுதல் என்ற தலைப்பில் வாராது போனாலும், அதன் முக்கியத்துவம் குறைந்தே போகிறது. பெருமைகளையும், வெற்றிகளையும் எவ்வளவு நாள் தான் கொண்டாட முடியும்? அந்த நொடி தாண்டினால் அவை வெறும் நினைவுகளே. எத்தனையோ பெரியோர், அறிஞர்கள், எல்லாம் நினைவாகி மட்டுமாகிய இந்நிலையியல் நமக்கும் அதுவே நடக்கும். அதனால்,  நல்ல விஷயங்கள்  கூட, பூதக்கண்ணாடி  வைத்துப் பார்க்கப் படவே அவை  அதிக கவனம் ஈர்க்கவும் வேண்டியதில்லை.  இதுவே அப்படியெனில், வேண்டாததைப்  பெரிது படுத்துவதற்காக  நான்கு வரி எழுதி பிறர் நேரத்தை  வீணாக்கவும் தேவையில்லை.

 

இக்காலத்தில் காலை சிற்றுண்டி நேரம், தலைப்பு பிறக்கும் நேரமாகிவிட்டது. சென்ற வாரம் தலையாய பிரச்சினையாக விவாதிக்கப் பட்ட ஒன்று, இந்த வாரம் வலுவிழந்த புயற்சுழி போல, கணினியிலிருந்து தலை நிமிர்த்திப் பார்க்காத கணவன் முன் வைக்கப்பட்ட ஏடு பின்னர் படிந்த ஆறின காபி போல, சென்ற தீபாவளிக்கு வாங்கி இந்த தீபாவளிக்கு கொளுத்த முயன்ற வானவெடி போல ஆகிப் போகின்றது. அப்போதுதான், நாம் ஏன் எல்லாவற்றையும் பூதக்கண்ணாடி அடியில் வைத்துப் பார்க்கிறோம் என்ற பேச்சு வந்தது.  கடலில் அலைகள் நிரந்தரம்.  புயல் அப்படி அல்ல. புயல் நேரம், ‘அலை நிரம்பிய அதே கடல்தான் இது.  இன்று ஏதோ ஆகிவிட்டது’  என்று பேசாதிருக்க வேண்டும்.  புயல் நேரம், ‘ மீனவர் கடலில் செல்ல வேண்டாம்’ என்று, குறிப்பிட்ட  எண் போட்ட கொடி ஏற்றுகிறார்கள். அதே போல்,  நாமும் பிரச்சினைகளை தள்ளி இருந்து பார்க்க முயற்சியாவது செய்வோம்.  கடலில் அலைகள் ஓய்வதில்லை. பிறவிப் பெரும் கடலிலும் தான். ஆழ்கடலில் ஆரவாரம் இல்லை.

 

பூதக்கண்ணாடி வழிப்  பார்வை சரியான முடிவுகள் எடுக்க உதவுவதில்லை. கண் கோளாறுகள் நம்மில் சிலருக்கு ஏற்படும்.  அதற்குத் தீர்வு  பூதக்கண்ணாடி இல்லை. மூக்குக்  கண்ணாடி.  மூக்குக் கண்ணாடியின் தேவை, அணிந்து கொள்ளும் நபருக்குத்தான்.  பார்க்கப்படும் பொருள் எதுவாகவும் இருக்கலாம்.  குழப்பம் ஏற்பட்டால், நமது மூக்குக்கண்ணாடியாக மனம் செயல்படலாம். நெருங்கின யாரேனும் செயல்படலாம். இவை எல்லாவற்றின், எல்லோரின் மூலமும் இறைவன் அருள் செயல்படலாம்.  நல்லவைகளுக்கும் இதே தான்.  மற்றவரிடம் உள்ள நல்லதையும் இயல்பாகப் பார்த்தால் போதும். அதில் பெரிது பண்ண என்ன உள்ளது? பிரமிக்க என்ன உள்ளது?  நம்மிடம் இல்லாத ஒன்று வேறெங்கோ பார்ப்பதே பிரமிப்புக்குக்  காரணம்.  பிரமிப்பு ஒப்பிடச் சொல்லும். இவ்வுலகில் எல்லோரும் ஏதேனும் துறையில் தேர்ச்சிப்பெற்றவர்கள். முத்தையா முரளிதரனுக்கு குமார சங்கக்கார போல துடுப்பாட இயலாமல் போகலாம். ஆனால், பந்து வீச்சில் அவர் ஆகச் சிறந்தவர். அதேபோல், நீங்கள் வைக்கும் முதலாம் அடியை இன்னொருவரின் 60 ஆம் அடியுடன் ஒப்பிடுவது, எந்த விதத்தில் நியாயம்? சிந்தித்துப்பாருங்கள. அது சோர்வு தரும். வீண் நேர விரயம்.  நம்மிடம் உள்ளதாக நாம் நினைக்கும் நல்ல குணங்களையும் பெரிசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  அந்த நினைப்பு கர்வம் தரும். தொட்டால்சுருங்கியாக்கும். சுருங்கக் கூறின், நல்ல விஷயமோ அல்லாத விஷயமோ, பூதக்கண்ணாடியைத் தவிர்த்து விடுவோம். எம்மையும் ஒரு வழமையானவராக எண்ணுவோம். வாழ்க்கையில் பெரிதாக நினைப்பவர்களுக்கும் எமக்கும் ஒரு பொதுவான விடயம் உள்ளது! அது என்ன தெரியுமா? ​நேரம். எம்மனைவருக்கும் ஒரு நாளுக்கு இருப்பது அதே 24 மணித்தியாலங்களே.

You may also like

Leave a comment