நல்ல நிறுவமொன்றின் பண்புகள்
நாம் முதலீடு செய்வதற்கு முன்பு அந்தப் பங்குகளைப் பற்றி ஆராயும்போது, நிறுவனத்தின் வருமானம், முதலீடு செய்யும் பங்குகளின் உண்மையான மதிப்பு, தற்போதையச் சந்தை விலை, நாம் அந்தப் பங்குக்கு கொடுக்கும் விலை சரியானது தானா எனப் பலவாறாக ஆராயும் முறையை (Fundamental Analysis) என்று சொல்வார்கள்.
பங்குகளைப் பற்றிய ஆய்வை இரு வகையாகப் பிரிக்கிறார்கள். அடிப்படை ஆய்வு(Fundamental Analysis), டெக்னிக்கல் ஆய்வு (Technical Analysis). இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.
நாம் ஒரு உடை வாங்க வேண்டுமென்றால் என்ன செய்வோம்? ஒரு துணியை பலவாறாக ஆய்வு செய்வோம். துணி தரமானது தானா, Design நன்றாக இருக்கிறதா, நல்ல முறையில் தைக்கப்பட்டுள்ளதா, துணி தயாரிக்கும் நிறுவனம் எத்தகையது, வேறு நிறுவனம் இதே மாதிரி உடையை தயாரித்துள்ளதா, துணியின் தரத்துக்கு ஏற்றவாறு விலை உள்ளதா, இல்லை அதிகமாக உள்ளதா என ஆய்வு செய்து நல்ல உடையை தேர்ந்தெடுப்போம். இது தான் Fundamental Analysis.
இதற்கு மாறாக, எந்த உடையை எல்லோரும் வாங்குகிறார்கள், எந்த டிசைனை எல்லோரும் தேர்வு செய்கிறார்கள், எந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை எல்லோரும் வாங்குகிறார்கள் என்று மட்டுமே பார்த்து தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தத் துணியை வாங்குவதற்குப் பெயர் தான் Technical Analysis.
நாம் முதலில் Fundamental Analysis பற்றிப் பார்ப்போம்.
பங்குகளை பெரும்பாலும் ஒரு லாட்டரிச் சீட்டு என்று நினைத்தே எல்லோரும் வாங்குகிறார்கள். அதிஷ்டம் இருந்தால் உயரும். இல்லையேல் நஷ்டம் தான் என்ற சிந்தனையே பெரும்பாலானச் சிறு முதலீட்டாளர்களிடம் காணப்படுகிறது. பங்குகள் பலச் சூழ்நிலையில் உயருகிறது. நமக்கெல்லாம் அந்த நுணுக்கம் தெரியவில்லை என்றே பலர் நினைக்கின்றனர். ஆனால் பங்குகள் சூழ்நிலையை மட்டுமே கொண்டு உயர்வதோ, சரிவதோ இல்லை. நீண்டக்கால முதலீட்டில், பங்குகள் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியையோ/சரிவையோச் சார்ந்தே இருக்கும்.
உதாரணத்திற்கு நம்மையே எடுத்துக் கொள்வோம். நம்முடைய வளர்ச்சி என்ன ? முதலில் நாம் குறைவாகச் சம்பாதித்திருப்போம். பின் வயது அதிகரிக்க, நம்முடைய சம்பாதியத்தியமும் அதிகரித்திருக்கும். நம்முடைய வரவுப் போல செலவுகளும் உண்டு. சிலருக்குச் செலவு அதிகம். சிலருக்குக் குறைவு. அதற்கு ஏற்றாற்போல நமது சேமிப்பும் இருக்கும். நம்முடையச் சேமிப்பு தான் நம்முடைய வளர்ச்சி. ஒவ்வொருவருடைய சேமிப்பு விகிதத்திலும் வேறுபாடு இருக்கும். இந்த விகிதத்தின்படி தான் ஒருவர் பணக்காரர் ஆவதும் மற்றவர் கோடிஸ்வரர் ஆவதும் நடக்கும். சிலருக்குச் செலவுகள் அதிகமாக, இருக்கும் நிலையிலேயே இருப்பார்கள்.
நிறுவனங்களும் அவ்வாறு தான். சில நிறுவனங்கள் வேகமாக வளரும். சில நிறுவனங்கள் குறைவாக வளரும். வேகமாக வளரும் நிறுவனத்தின் நிகர இலாபம் அதிகமாக இருக்கும். இந்த வளர்ச்சி விகிதத்தின் படியே சின்ன நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக மாறும், பெரிய நிறுவனங்கள் உலக தரம் நோக்கி வளரும். பங்குகளும், நிச்சயம் அதை பிரதிபலிக்கும். அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு சந்தையில் பங்குகள் சரிந்தாலும் /உயர்ந்தாலும், நீண்ட கால சூழ்நிலையில் பங்குகளின் விலை நிறுவனத்தின் வளர்ச்சியைச் சார்ந்தே இருக்கும்.
இந்த வளர்ச்சியை கண்டு, பங்குகளை வாங்குவதற்கு பல அளவுகோல்கள் உண்டு. அந்த அளவுகோல்களை இப்பொழுது பார்ப்போம். பங்குகளை வாங்குவதற்குப் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான அளவுகோள் தான் P/E Ratio எனப்படும் Price Earnings Ratio. பங்குகளின் சந்தை விலை மற்றும் நிறுவனத்தின் இலாபத்தைக் கொண்டு சந்தையில் பங்கு விலை சரியாக இருக்கிறதா, அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஒரு அளவுகோள்.
ஒரு நிறுவனத்தின் இலாபத்தைப் பங்குகளின் சந்தை விலை பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு பிரதிபலித்தால் அந்தப் பங்குச் சரியான விலையில் இருப்பதாகப் பொருள். அவ்வாறு இல்லாமல், சந்தை விலை குறைவாக இருந்தால், அந்தப் பங்கு வாங்குவதற்கு தகுதியானப் பங்கு (Under Valued Share). சந்தை விலை அதிகமாக இருந்தால் விற்றுவிட வேண்டியப் பங்கு (Overvalued Share).
ஆனால் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எல்லா நேரங்களிலும் சரியாகப் பிரதிபலிக்காது. இந்த P/E முறையில் சில Limitations இருக்கிறது. அதை இறுதியாகப் பார்ப்போம்.
P/E = Market Price / EPS
Market Price = பங்குகளின் சந்தை விலை
EPS = ஒரு பங்குடைய லாபம்
EPS என்பது ஒரு பங்கு அந்த நிறுவனத்திற்கு ஈட்டும் லாபம் – Earnings per share.
EPS = Net Profit / No. of outstanding shares
அதாவது நிகர இலாபத்தை, அந்த நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும் கொண்டு வகுத்தால் வருவது தான் EPS.
ஒரு நிறுவனத்தின் நிகர லாபம் 35,000 என்றும் மொத்தப் பங்குகள் 10,000 என்று எடுத்துக் கொண்டால்,
EPS = 35,000 / 10,000 = 3.5
இங்கு ஒரு பங்கு 3.5 ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இது வேறுபடும். அந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு EPSம் இருக்கும்.
இனிநாம் P/E க்கு வருவோம்.
P/E = Market Price / EPS
பங்குகளின் சந்தை விலை 35 ரூபாய்,
ஒரு பங்குடைய லாபம் (EPS) = 3.5
P/E = 35/3.5 = 10
இந்த நிறுவனத்தின் P/E = 10 என்பது எதைக் குறிக்கிறது?
P/E என்பது நாம் முதலீடு செய்யும் பணம் எவ்வளவு ஆண்டுகளுக்குள் சம்பாதிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கும் ஒரு அளவுகோள்.
மேலே உள்ள EPS மற்றும் P/E எடுத்துக் கொள்வோம்.
நாம் 100 பங்குகளை இந்த நிறுவனத்தில் வாங்குகிறோம்.
மொத்த முதலீடு 3500 ரூபாய் (100 x 35 = 3500)
நம்முடைய 3500 ரூபாய் முதலீடு ஒரு ஆண்டுக்கு 350 ரூபாய் சம்பாதிக்கிறது (நாம் வாங்கும் பங்குகள் = 100, EPS = 3.5 எனவே 100 x 3.5 = 350).
இந்தக் கணக்குப்படி நாம் முதலீடு செய்த 3500 ரூபாயை சம்பாதிக்க 10 ஆண்டுகள் ஆகிறது. அதாவது நாம் இந்த ஆண்டு 3500 ரூபாய் முதலீடு செய்தால், இது 7000 ரூபாயாக பெருக பத்து வருடங்கள் பிடிக்கும்.
இதுவே P/E 1 என்றோ, 2 என்றோ இருந்தால் நாம் முதலீடு செய்தப் பணத்தை ஒரு ஆண்டுக்குள்ளோ, இரண்டு ஆண்டுகளிலோ சம்பாதித்துக் கொள்ள முடியும்.
இதன் படி நீங்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வீர்கள் ?
P/E 1 என இருக்கும் பங்குகளிலா இல்லை 40 என்று இருக்கும் பங்குகளிலா (40 என்றால் உங்களுடையமுதலீட்டை சம்பாதிக்க 40 ஆண்டுகள் தேவைப்படும் என்பது பொருள்)?
1 என்று இருக்கும் பங்குகளில் தானே? பொறுங்கள், இன்னும் இதைப் பற்றி கவனிக்கவேண்டியுள்ளது.
அதாவது நாம் இங்கே கவனிக்க வேண்டியது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சித் திறன். மேலே உள்ள கணக்கில் நம் வசதிக்காக நாம் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்கும் ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டோம் (P /E = 3.5 for the entire10 year period). ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சி அவ்வாறு இருப்பதில்லை.
நம்முடைய சம்பாதியத்தையே எடுத்துக்கொள்வோம். ஆரம்ப காலத்தில் நம்முடைய சம்பளம் வேகமாக வளரும். பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்களின் வளர்ச்சி வீதம் இன்னும் அதிகமாக இருக்கும். பின் ஒரு தேக்கம் வரும். அதிக வளர்ச்சியிருக்காது. பின் அதுவும் தேய்ந்து ஒரே அளவிலான சம்பளத்துடன் காலத்தை ஓட்டுவோம்.
புதியதாக ஒரு வங்கித் துவக்கப்படுகிறது என்று எடுத்துக்கொள்வோம் – HSBC உதாரணமாகக் கொள்வோம். ஒரு சின்ன நிறுவனமாக சில முக்கிய நகரங்களில் கிளையைத் துவக்கியது. அப்பொழுது அதன் வளர்ச்சி விகிதம் 10% என்றுக் கணக்கிடுவோம். அதன் பிறகு பல சின்ன நகரங்களில் தனது கிளையைத் துவக்குகிறது, வளர்ச்சி விகிதம் 20%. பிறகு கிராமங்கள் – வளர்ச்சி 30%. இந்த நிலையை அடைந்தவுடன் அந்த நிறுவனத்திற்கு ஒரு தேக்க நிலை வந்துவிடுகிறதல்லவா ? (Off course ஒரு நிறுவனம் அவ்வப்பொழுது அறிமுகப்படுத்தும் கவர்ச்சிகரமான திட்டங்கள் போன்றவை மூலம் மேலும் வளர்ச்சி அடையும். அதையெல்லாம் கொஞ்சம் மறந்து விடுவோம்).
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும் பொழுது அந்த நிறுவனத்தின் P/E ம் அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்க நிலையை அடையும் பொழுது P/E குறைந்து விடும். HSBC வங்கியின் வளர்ச்சி 20 – 30% ம் இருக்கும் பொழுது அதன் P/E அதிகமாக இருக்கும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது P/E குறைந்து விடும்.
ஒரு நிறுவனத்தின் P/E அதிகமாக இருக்கிறது என்று ஒதுக்கி விடவும் முடியாது, குறைவாக இருக்கிறது என்று அந்தப் பங்குகளை வாங்கி விடவும் முடியாது.