எளிமையான வாழ்க்கைக்கு சில வழிகள் – பகுதி II
மதுவை நிறுத்துங்கள்
தற்காலத்தில் சிலரின் வாழ்க்கை முறையில் மது என்பது ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. வெற்றிக்கும் தோல்விக்கும் மது தான் வழி என்று ஒரு கூட்டம் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துகிறது.
அதேவேளை சினிமாவையும் நாம் குறிப்பிட்டுக் கூறத்தான் வேண்டும். அவற்றில் நடிகர் நடிகைகள் செய்பவைகள் சரி என்று நினைக்கும் ஒருக் கூட்டமும் அவற்றை உதாரணமாக எடுத்து தமது வாழ்க்கையில் சேர்த்துக் கொள்ளும் மூடர்களும் எம்மிடையில் வாழ்ந்துக் கொண்டுத்தான் இருக்கிறார்க்ள்.
குறிப்பாக எமது தமிழ் சமூகத்தில் இந்நிலைமை கொஞ்சம் உக்கிரமாகத் தான் உள்ளது. திரைப்படமொன்றை படமாக பாரக்காமல் அதனை வாழ்க்கையாக கருதுவோரும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இதிலிருந்து மதுவுக்கு அடிமையாகும் நிலைமைகள் பெரிதும் ஏற்படுகின்றன.
உங்கள் உடலிலிருந்து தகாத பொருட்களை விளக்கிக்கொள்ளும் போது, உங்களின் அன்றாட வாழ்க்கை சுமூகமாகச் செல்லும். அது சாதாரணமாக உங்கள் வாழ்க்கையை மெதுவாக வலுவிழக்கச் செய்யக்கூடியது. நாளாந்த செயற்றிறனை அதுக் குறைக்கும்.
இப்பழக்கத்தை தவிர்த்துக் கொள்வதற்காக நான் ஒரு வழக்கத்தை பரிந்துரைக்கிறேன். அதன் பெயர் ‘30 நாள் சவால்’. உங்களால் 30 நாட்களுக்கு மதுபோதையின்றி இருக்க முடியுமா? எனப்பாருங்கள். இயலுமாயின் நீங்கள் உங்கள் நண்பர்களையும் அதில் இணைத்துக் கொள்ளலாம். உங்களில் யாருக்கு மனவுறதி அதிகம் எனப்பாருங்கள். இதனை தொடர்ந்துச் செய்யும் பட்சத்தில் நீங்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபடுவீர்கள்.
இயலாத விடயத்துக்கு ‘இயலாது’ என்றுக்கூற பழகுங்கள்
சிலவேளை நீங்கள் உங்களுக்கு பிடிக்காத விடயத்துக்கு கூட பிறர் மனது கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ஆமாம் என்று சொல்லியிருக்கும் சந்தர்ப்பங்களை நினைத்துப் பாருங்கள். இதனால் நீங்கள் உங்களுக்காக செய்யவிருந்த சிலவற்றை தவறவிட்டிருக்கலாம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் சொல்ல வேண்டியதெல்லாம்,
“தற்சமயம் நான் முன்னுரிமைக் கொடுக்க வேண்டிய விடயங்களில், இது இடம்பெறாது. நான் எனது குறிக்கோளுக்கு முக்கியமானவைகளையே இப்பொழுது செய்துக் கொண்டிருக்கிறேன்.” என்றாகும்.
இவ்வாறு கூறும்போது பலரும் உங்கள் நிலைமைப் புரிந்துக் கொள்வார்கள். அதே சமயம் நீங்கள் உங்களை ஒழுங்குப்படுத்தியிருக்கும் விதத்தைக் கண்டு உங்களின் மீது அவர்களுக்கு மதிப்பும் ஏற்படக்கூடும்.
நாட்காட்டியொன்றை உபயோகியுங்கள்
நாட்காட்டியொன்றின் அருமைத் தெரிந்துக்கொள்ள அன்றாட வாழ்க்கையில் சில சிக்கல்களை நாம் சந்தித்திருக்க வேண்டும் என்பார்கள்.
வாழ்க்கையில் வெற்றியடைந்த பலரின் வாழ்க்கையை எடுத்து பார்த்தால் அவர்கள் தமது செயற்பாடுகளை ஒழுங்குப்படுத்தி முறையான திட்டத்தை வகுத்து நாளாந்தம் செயற்படுவாதே அவர்களிடமுள்ள பொதுவான பழக்கமோக அமைகிறது, அதாவது அவர்கள் நேரத்தின் முக்கியத்துவம் அறிந்து செயற்படுவார்கள்.
இலங்கையின் செல்வந்தர் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் தம்மிக்க பெரேராவுக்கும் உங்களுக்கும் வழங்கப்படும் ஒரு பொதுவான விடயம் உள்ளது. ஒவ்வொரு நாளும் 24 மணித்தியாலங்கள் வழங்கப்படுகின்றது. அதனை எவ்வாறு உபயோகிக்கின்றோம் என்பதிலியே எமது வெற்றியும் தங்கியிருக்கின்றது.
நாட்காட்டியின் உதவியுடன் நாம் நாளொன்றில் செய்ய வேண்டிய செயற்பாடுகளை மட்டுப்படுத்தலாம். ஆகவே எல்லா வேலைகளையும் எல்லா பொழுதிலும் செய்ய தேவை ஏற்படாது. நீங்கள் நாட்காட்டியுடன் உங்கள் செயற்பாடுகளில் இலயித்து செயற்படும் போது நாளாந்த சிக்கல்கள் அற்றுப்போகலாம்.
ஞாபக மறதியினால் சிலவேளைகளில் நாம் முக்கியமானவைகளை செய்யத் தவறலாம் அல்லது புறம் தள்ளலாம். இந்நிலைமைகளுக்கு சிறந்த தீர்வு நாட்காட்டி பாவனையாகும்.
உங்கள் வீட்டுச் சூழலை நேர்த்தியாக பேணுங்கள்
சிலவேளைகளில் நாம் சுற்றுலா நிமித்தமோ பயணங்கள் நிமித்தமோ வெவ்வேறு இடங்களுக்கும் வெவ்வேறு பிரதேசங்களுக்கும் சென்று திரும்பும் போது நாம் பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்தோ சேகரித்தோ வீட்டில் அடுக்கி வைத்திருக்கலாம்.
என்றாவது உபயோகமாகும் என நாம் சேகரிக்கும் சில பொருட்கள், நாம் எதிர்பார்த்ததை விட அதிக நாள் எம் இடத்தை சுவீகரித்துக்கொள்ளும். காலத்தோடு அதன் பயன்பாட்டை நினைத்துப்பார்த்தால், அது சற்று குறைவாகவே இருக்கும். ஞாபகங்கள் நிறையப்பெற வேண்டியது, நாம் பெற்ற அனுபவங்களாலேயே ஒழிய எம்மைச்சுழவுள்ள திரவியங்களால் அல்ல. ஆகவே எம்மைச் சூழ அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்வாம். அவற்றை இடத்துக்கு ஏற்றவாறு முறையாக ஒழுங்கமைத்து வைக்கும் பட்சத்தில் ஒழுங்கும் நேர்த்தியும் பேணப்படும்.