எளிமையான வாழ்க்கைக்கு சில வழிகள் – பகுதி I
வாழ்க்கை சிலவேளை சிக்கல்கள் நிறைந்ததாக மாறலாம். நாம் அனுபவிக்கும் எல்லா வழிகளிலும் மகிழ்ச்சி வருவதாக எண்ண இயலாது. எல்லா விடயங்களின் போதும் நாம் திருப்தியை எதிர்பார்க்க இயலாது. காரணம், எல்லா வேலைகளையும் ஒரு சில கணப் பொழுதில் நிறைவேற்றவே எல்லோருக்கும் விருப்பம். உலகில் சில கதாபாத்திரங்களை எடுத்துக்காட்டாக நான் குறிப்பிட்டால், அதுவும் சில திரைக்கலைஞர்கள் தமது நாளை பலவிதமான வேலைப்பளுக்கள் நிறைந்த ஒன்றாக உருமாற்றி உள்ளார்கள். இதுபோன்ற சிக்கல் நிறைந்த வாழ்க்கை எளிமையானதாக மாற்ற சிறு வழிகள் இதோ.
நாளொன்றை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்
குறிப்பாக உங்கள் காலை பொழுது எவ்வாறு இருக்க வேண்டுமென அதன் செயற்பாடுகளை வரிசைப்படுத்தி கொள்வது மிகவும் முக்கியமானது.
அதற்கான சில துணுக்குகள் இதோ,
- ஒவ்வொரு நாளும் காலை ஒரே நேரத்தில் எழும்புகள்.
- படுக்கையை விட்டு எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீரை பருகுங்கள்.
- உங்கள் படுக்கையை விரியுங்கள்.
இவற்றை நாம் நாள் ஒன்றின் முதல் வெற்றிகளாக கருதலாம்.
- இவற்றை முடித்துவிட்டு சில உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.
- அவற்றை செய்து முடித்தபின் படிப்பினை ஊட்டும் ஏதேனும் காணொலியையோ புத்தகம் ஒன்றையோ பாருங்கள்.
- குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய விடயங்களை வரிசைப்படுத்துங்கள்.
உங்கள் நீண்ட நாள் பயணத்துக்கு ஏதுவாக அமையப்போகும் ஏதேனும் ஒரு விடயத்தின் பகுதியை செய்யுங்கள்.
மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்
நீங்கள் முறையான இலக்கின்றி வேலைகளில் ஈடுபடும்போது உங்கள் பாதையும் அங்குமிங்குமாக செல்லுமே தவிர முன்னேற்றங்கள் ஏற்படுவது கடினம். அவ்வப்போது உங்களை கவரும் விடயங்களுக்கு உங்களின் அவதானம் செல்லுமேயன்றி, இவ்வாறு தொடங்கும் செயற்பாடுகள் நிறைவடைவதற்கான சாத்தியங்கள் குறைவே.
வருடாந்தம்,
நான் இந்த வருடத்திற்குள் எதனை செய்யப் போகின்றேன்?
காலாண்டு,
குறிப்பிட்ட வருடத்தில் இலக்கை அடைய மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய செயல்பாடுகள் யாவை?
மாதாந்தம்,
குறித்த காலாண்டு இலக்கை அடைய வேண்டுமாயின் நான் இம்மாதத்தில் நிறைவேற்ற வேண்டிய செயல்கள் யாவை?
நீங்கள் உங்களை மேலும் ஒழுக்கமாக்கிக்கொள்ளும் பட்சத்தில் நாளாந்தம் செய்ய வேண்டியவைகளை கூட வகுக்கலாம்.
அவற்றை நீங்கள் ஒரு ஏட்டில் குறித்து நாளாந்தம் பார்க்கும் வகையில் சுவரிலோ மேசையிலோ ஒட்டி வையுங்கள். நாளாந்தம் உங்கள் இலக்குகளை மீட்டிப்பார்க்கவும் நினைவுப்படுத்திக் கொள்ளவும் அவை உதவும்.
செய்திகளை பார்ப்பதையும் வாசிப்பதையும் தவிருங்கள்
இதில் ஒரு உண்மைக் கலந்துள்ளது. உங்கள் தொழிலையோ வாழ்க்கையையோ பாதிக்கும் செய்தியொன்று எவ்விதத்திலேனும் உங்களை செவியை அடைந்துவிடும். செய்தியின் மூலம் தான் அவற்றை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று அவசியம்.
தற்காலத்தில் அனேகமான செய்திகள் ஒரு எதிர்மறையான விடயத்தையோ பாதகமான விடயத்தையோ தான் கொண்டு சேர்க்கிறது. அதனை கேட்டு நீங்கள் உங்களை துவண்டுப் போகச் செய்தால் அதன் பாதிப்பு உங்களுக்கேயன்றி அக்குறித்த செய்தி நிறுவனத்துக்கு அல்ல.
அதேவேளை அவற்றிற்காக நீங்கள் செலவளிக்கும் நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிவீர்களா?
இதற்கான சிறந்த வழியாக நான் பரிந்துரைப்பது, உங்கள் நண்பர் கூட்டத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் வழியாக நீங்கள் உங்களுக்கான தகவல்களை அறிந்துக் கொள்ளலாம். காரணம் நீங்கள் அறிய வேண்டியவற்றை பகுத்துக் கூறுவார்கள். அதேவேளை உங்கள் தொடர்புகளுடன் நேருக்கு நேராக கதைக்கவும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.